பலி ஆயிரத்தை நெருங்குகிறது... போரை அறிவித்த இஸ்ரேல்...

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் இஸ்ரேல் நாட்டில் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல் தொடுத்தது. இதில், இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த 200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் படையின் முதல் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க தொடங்கியது.

மேலும், இன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் இன்று போர் அறிவிப்பையும் அறிவித்தது. தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு, "Operation Iron Swords' என பெயரிடப்பட்டுள்ளது.

காஸா படைகளின் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா வெளியிட்ட ஒரு வீடியோவில் அவர் கூறியதாவது,"இஸ்ரேலிய குடிமக்களே, நாம் போரில் இருக்கிறோம். இது வெறும் ஆப்ரேஷன் இல்லை, போர். இதில் நாம் வெல்வோம். ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு அதிக விலையை தர வேண்டியதிருக்கும்" என அறிவித்தார்.

இஸ்ரேலில் இன்று பண்டிகை என்பதால் விடுமுறை தினமாகும். இந்த சமயத்தில், 5 ஆயிரம் ராக்கெட்டுகள் வானில் இருந்து இஸ்ரேலை இன்று தாக்கின. இது ஹமாஸ் படையினரின் தாக்குதல் என இஸ்ரேலிய ராணுவம் கூறுகின்றது. இஸ்ரேலிய அரசு ஹமாஸ் படையினரை பயங்கரவாதிகள் என தொடர்ந்து குறிப்பிடுகின்றனர்.

காஸா வழியாக ஊடுருவல்

பல பாலஸ்தீன போராளிகள் பல நகரங்களுக்குள் ஊடுருவியுள்ளதாகவும், குடியிருப்பாளர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் இஸ்ரேல் கூறியுள்ளது. முன்னதாக, ஹமாஸின் இராணுவத் தலைவர் 5,000 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாகக் கூறினார். மேலும், ஹமாஸ் போராளிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

பல பாலஸ்தீனிய போராளிகள் காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்ததுடன், எல்லையில் வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட்டுகளை வீசத் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு பின் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

Operation Al-Aqsa Storm

முன்னதாக, ஹமாஸின் இராணுவப் பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு புதிய ராணுவ ஆப்ரேஷனை தொடுப்பதாக அறிவித்தார். "Operation Al-Aqsa Storm" என்ற ஹமாக்ஸ் இந்த தாக்குதலுக்கு பெயரிட்டுள்ளது. இன்று தொடக்கத்தில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலில் ஏவப்பட்டதாகக் அவரே கூறினார். காஸாவில் இருந்து ஊடுருவியதை இஸ்ரேலும் தெரிவித்துள்ளது.